அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் கூறியிருந்தார்.
தாய்வான் நீரிணையின் இராணுவ மயமாக்கல் மற்றும் சீனாவின் யுவான் வங் 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி அவர் இந்த கருத்தை வெளியிட்டமைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயல் என்றும் விமர்சித்துள்ளது.
மேலும் தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களே குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.