ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூவரையும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் அடங்கலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணையின் முடியும் வரை அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தவிர சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோர் இந்த குற்றச்சாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.