கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த வருடம் உயிரிழந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் போது, மறைந்த ஊடகவியலாளரின் திருவுருவ படத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தான் மலர் மாலை அணிவித்தார்.
ஈகை சுடரினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.
இந்நிலையிலும் அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.
சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்த இவர், கடந்த 2021 செப்டம்பர் 2 ஆம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.