அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், சிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அவுஸ்ரேலியா மண்ணில் அவுஸ்ரேலியா அணிக்கெதிராக சிம்பாப்வே அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
எனினும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2-1 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி வென்றுள்ளது.
டவுன்ஸ்வில்லே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 31 ஓவர்கள் நிறைவில் 141 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வோர்னர் 94 ஓட்டங்களையும் மெக்ஸ்வேல் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ரியான் பர்ல் 5 விக்கெட்டுகளையும் பிரட் எவண்ஸ் 2 விக்கெட்டுகளையும் ங்கறவ, நியுச்சி மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 39 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், சிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் ரெஜிஸ் சகப்வா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் மருமணி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கெமரூன் கிறீன், மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ரியன் பர்ல் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, தொடரின் நாயகனாக ஆடம் செம்பா தெரிவுசெய்யப்பட்டார்.