மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான நிறுவன சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளை கடுமையாகப் பாதித்துள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
ஆழமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் நாட்டை ஒரு புதிய பாதையில் வழிநடத்த அரசாங்கத்திற்கு புதிய வாய்ப்பு என கூறியுள்ளது.
தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு தற்காலிக சிறப்பு நீதிமன்றம். அனைத்து பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் பற்றிய உண்மையை நிலைநாட்டுவதில் முன்னேற்றம் இல்லாதமை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா. சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பும் விடுத்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகளிடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.