சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும் விவாதம் அவசியம் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதன் காரணமாக அது தொடர்பான விவாதத்தை எதிர்வரும் வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திருத்தங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விவாதம் நடத்துமாறு கோரியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று 2ஆவது நாளாகவும் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.