ஐந்து வயதுக்கு உட்பட்ட எடை குறைந்த சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை 6ஆவது இடத்திலும் தெற்காசியாவில் 2 ஆவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) அண்மைய அறிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
சுகாதார அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இந்த அறிக்கையை தொகுக்க யுனிசெப் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போசாக்கின்மை நிலை 13.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் சிறுவர்களின் ஊட்டச் சத்து குறைபாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக நீண்டகால தரவுகளின் அடிப்படையில் யுனிசெப் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கணக்கிடுவதற்கு, வயதுக்கேற்ற உயரம், உயரத்துக்கான எடை மற்றும் வயதுக்கேற்ற நிறை ஆகிய மூன்று காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆனால் யுனிசெப் தனியாக உயரத்துக்கேற்ற நிறையை மட்டும் பயன்படுத்துவதன் அடிப்படையில் தவறான அறிக்கையைத் தயாரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.