நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனல்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார உற்பத்தி மூலங்களை நிர்வகிப்பதற்காக மேலும் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 வீதத்திற்கும் அதிகமாக உள்ளதுடன், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 92 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 85 வீதமாக உயர்ந்துள்ளதுடன், போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 73 வீதத்தை எட்டியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை எனவும் இதன் காரணமாக சிறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.