நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சமீபகாலமாக சாதாரண பொலிஸ் கடமைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. பிடியாணையை நிறைவேற்றும் வாய்ப்பை இழந்துள்ளோம். ரோந்து பணியை செய்ய நேரத்தை இழந்துள்ளோம். இதனால் குற்றச்செயல்கள் பெருகும். எனவே பொலிஸாரின் இயல்பான நடவடிக்கைகளை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.
மேலும் ஐஸ் போன்ற போதைப்பொருற்கள் சமூகத்தில் பரவலாக பரவிவருகிறது.சமீப நாட்களாக ரெய்டுகள் குறைந்துள்ளன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐஸ் போன்ற போதைப்பொருற்கள் பெருமளவில் பரவிவிட்டன.
பாடசாலை செல்லும் குழந்தைகள்கூட ஐஸ் பயன்படுத்துகின்றனர். போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் இந்நாட்டின் தொழிலாளர் சக்தியில் உள்ள இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் போதைப்பொருள் பாவனை செய்கின்றனர். கூடிய விரைவில் இந்த நிலையை மாற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.