ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் நான்காவது போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டால் திரில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சார்ஜாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இப்ராஹிம் சத்ரான் 35 ஓட்டங்களையும் ஹஸ்ரதுல்லா ஸசாய் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா, மொஹமட் ஹஸ்னெய்ன், நவாஸ் மற்றும் சதாப்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டால் திரில் வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சதாப் கான் 36 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாரூக்கீ மற்றும் அஹமட் மாலிக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 36 ஓட்டங்களையும் 1 விக்கெட்டினையும் வீழ்த்திய சதாப் கான் தெரிவுசெய்யப்பட்டார்.