மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆற்றில் இறால் பண்ணையின் நச்சுத்தனைமை கொண்ட கழுவு நீர் கலப்பதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதிவேண்டும் என்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த ஆற்றில் உள்ள மீன்கள், நண்டுகள், பாம்புகள், உட்பட பல நீர்வாழ் உயிரினங்கள் கடந்த செவ்வாய்கிழமை காலை தொடக்கம் இரண்டு தினங்களாக உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு ஆற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளின் நச்சுத்தன்மை கொண்ட கழுவு நீர் இந்த ஆற்றில் திறந்து விடப்பட்ட செயலால் மீனவர்களின் மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன் இனங்களும் அழிவடைந்து வருகின்றன.
இந்த ஆற்றில் இருந்து இவ்வாறு ஒருபோதும் மீன்கள் இறந்து கரையொதுங்கியது அல்ல என்றும் இருந்தபோதும் இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த அதிகாரிகள் உயிரிழந்த மீன்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதேச அதிகாரிகளின் பரிசோதனையில் தமக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ள கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கருணேஸ்வரன், இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இப் பிரதேசத்தில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 250 குடும்பங்கள் வாவாதார தொழிலான நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவருகின்றன.
இந்த நிலையில் இவ்வாறு மீன் இனங்கள் உயிரிழந்து கரையொதுங்கியதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.