2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபை தலைவர்களுக்கு தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 2023-2025 இடைக்கால வரவு செலவுத் திட்ட கட்டமைப்பிற்கு இணங்க 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதே குறித்த சுற்றறிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கடுமையாகப் பின்பற்றுமாறும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதன் அடிப்படைக் கருப்பொருளானது, குறைந்தபட்ச உள்ளீடுகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் அது ஒவ்வொரு அரச நிறுவனங்களின் பொதுவான இலக்காக இருக்க வேண்டும் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக 2023ஆம் ஆண்டு அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கூட்டு நிதியில் இருந்து சம்பளம் வழங்கும் பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் செப்டம்பர் 14 அல்லது அதற்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.