தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என அறிவித்திருந்த போதிலும் அந்த ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படவில்லை.
3ஆம் திகதியில் இருந்து இன்று வரை மின்வெட்டு இல்லை. அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படவில்லை.
5ஆம் திகதி, வழங்கல் அதிகரித்துள்ளது. தேவையான அளவை விட அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் தற்போது உள்ளது.
எனவே, இந்த நிலக்கரி பிரச்சினை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வரவில்லை என்றால் ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது.“ எனத் தெரிவித்துள்ளார்.