கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கை மட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் மரநடுகை நிகழ்வானது நேற்று வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாமதேவ புர ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்களான இந்து மத குரு சத்தியானந்தா சர்மா குருக்கள், முஸ்லிம் மத குரு முகமட் நிரோசன் ,கிராம அலுவலர், முன்பள்ளி சிறுவர்கள், சர்வமத குழு உறுப்பினர்கள் சர்வமத பிரிவின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர், இந்த மரநடுகை செயற்பாடானது இயற்கையை நேசிக்கும் ஒரு செயற்பாடாகும் என்றும் இதன் ஊடாகவே கடவுள் மனித குலத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு காடுகள் மற்றும் மரங்கள் அழிக்கைப்பட்டமையே காரணமாகும் என்றும் ஆகவே அதன் தாக்கத்தை குறைப்பதற்கு மரநடுகை செயற்றிட்டத்தை நடைமுறைபடுத்துவது ஒரு சிறப்பம்சமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள், சர்வ மத குழு உறுப்பினர்கள், கிராம அலுவலர் என தனித்தனியாக மரக்கன்றுகளை நாட்டினர்.
பின்பு சர்வமத தலைவர்கள் இணைந்து முன்பள்ளி சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்களும் சிறுவயதில் இருந்து மரம் நட வேண்டும் என்ற கருவை வழங்கினர்.