இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வந்துள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சோங்கோன் (Martin Chungon) இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பின் பிரகாரம், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ட்டின் சொங்கோன் நேற்று நாட்டை வந்தடைந்தார்.
இதனையடுத்து அவர், நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
நாட்டின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் சந்தித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னர், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் ஷபிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இன்று நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.