ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவான் போபகே ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை பொய்ப்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தன்னையும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைதுசெய்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாங்கம் செயற்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதையும் மனித உரிமைகள் பேரவைக்கு அவர் எடுத்துரைத்துள்ளார்.