மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பாக நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள பல பெரிய மருத்துவமனைகளின் சிகிச்சை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு உரிய நேரத்தில் மருந்துகளை முன்பதிவு செய்யாமையே தற்போதைய மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.