நிலைபேறான தன்மைக்கு உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி-20 கூட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகெங்கிலும் வலுவான மீட்புக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் இதயம் இது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய நிகழ்வு என்றாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களால் மிகவும் கடுமையாக உணரப்படுகின்றன.
குறிப்பாக வளரும் நாடுகள் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்துள்ளன, ஆனால் காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது.
எனினும், வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பை வழங்கியவர்கள் புவிவெப்பமடைதலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்
சமகால சுற்றுச்சூழல் சவாலை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முன்முயற்சியும் சமத்துவம் மற்றும் தேசிய சூழ்நிலைகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
அதேநேரம், வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அந்தந்த திறன்களின் கொள்கையின் அடிப்படையில் அவை இருக்க வேண்டும்.
2023ஆம் ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்தோனேசிய ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் பக்க நிகழ்வுகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றார்.
இறுதியில், அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியாவின் ஜி-20இக்கான தலைமைத்துவத்தின் போது சுற்றுச்சூழல் பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் காலநிலை நிலைத்தன்மை செயற்குழு தொடர்பான நிகழ்வுகளுக்கு அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென்ற அழைப்பினையும் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.