காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டின் முன்னாள் தலைவருமான சையத் அலி ஷா கிலானியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் நிலைமைகள் சுமூகமாக இருந்தது.
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஹுரியத்தின் மூத்த தலைவர் சையத் அலி ஷா கிலானி கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி காலமானார்.
இதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ஜீலானி இறந்த உடனேயே பாதுகாப்பை பலப்படுத்தியது. அத்துடன் முடக்கல் அறிவிப்புக்களை விடுத்து இணைய வசதிகளையும் நிறுத்தியது.
இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பள்ளத்தாக்கில் அனைத்து கல்வி மற்றும் அரச நிறுவனங்களும் திறந்திருந்த நிலையில், சந்தைகளும் பொதுப்போக்குவரத்தும் வழக்கம் போல் இயங்கியதுடன், எந்த இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.
ஜிலானியின் இல்லமான ஹைதர்புரா ஸ்ரீநகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2019 ஓகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஏற்பட்ட இரண்டாவது பெரிய பின்னடைவு ஜீலானியின் மரணமாகும்.
ஆவர் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் இருந்ததோடு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
இவ்விதமானவரின் மறைவால் காஷ்மீரில் பிரிவினைவாதம் முடிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் சிலர் நம்புகிறார்கள்.
முன்னதாக, ஜிலானி 1989இல் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சி வெடித்த பிறகு, அவர் தேர்தல் அரசியலைத் துறந்து, பிரிவினைவாதத் தலைவராக முக்கியபங்கு வகித்தார்.
அவர் இறப்பதற்கு முன், அதிகாரிகள் அவரை 13 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைத்திருந்தனர்.
2010ஆம் ஆண்டு உமர் அப்துல்லாவின் ஆட்சியின் போது காஷ்மீரில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் நடந்த மாபெரும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய போது அவர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், 2015 இல், முப்தி முஹம்மது சயீத்தின் கீழ், சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற ஜீலானி அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் ஒரு பொதுக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர் அவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.
சில சமயங்களில் மருத்துவப் பரிசோதனைக்காக உயர் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு ஜீலானி கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
அவருக்கு பல இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில் புற்றுநோய் காரணமாக அவரது சிறுநீரகங்களில் ஒன்று அகற்றப்பட்டது.
அவரது நெருங்கிய வட்டாரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது நினைவாற்றலும் போய்விட்டது.
கடந்த காலங்களில், அவர் ஜமாத்-இ-இஸ்லாமி சார்பில் பல முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 15 ஆண்டுகளாக சோபூர் தொகுதியை சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்-இ-இஸ்லாமியில் இருந்து தனது அரசியலை தொடங்கினார் ஜீலானி.
அவர் 2003 இல் ஜமாத்-இ-இஸ்லாமியிலிருந்து பிரிந்து, தெஹ்ரீக் ஹீரியத் என்ற தனது சொந்தக் கட்சியை உருவாக்கினார். அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்திருந்தனர்.
2002 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாநாடு வேட்பாளரை நிறுத்தியதற்கு பதிலடியாக ஹுரியத் மாநாட்டிலிருந்தும் பிரிந்து, பின்னர் அதன் ஒரு பிரிவின் தலைவரானார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் கொமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த நாடாளுமன்றக் குழு ஸ்ரீநகருக்கு சென்றது.
எனினும் அந்த நாடாளுமன்றக் குழுவினைச் சந்திப்பதை ஜிலானி மறுத்தார். இது அவர் சமரசத்துக்கு தயார் இல்லை என்பதை வெளிப்படுத்தியது.