டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர், தொழில்முறை டென்னிஸ் அரங்கிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் இரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்தாலும், அவரை ஆனந்தத்துடனும் கண்ணீருடனும் வழியனுப்பி வைத்துள்ளனர்.
சக வீரர்கள், பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்கள் என பலரும் பெடடரின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
41 வயதான சுவிஸ்லாந்தின் பெடரர், வெகு விரைவில் தொடங்க உள்ள லேவர் கிண்ண டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தனது ஓய்வறிக்கையில், ’24 ஆண்டுகளை 24 மணி நேரம் போல உணர்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதுடன், 5 சீசன்களை உலகின் முதல்நிலை வீரராக நிறைவு செய்து அசத்தியவர் ரோஜர் பெடடர்.
அவரும், ரஃபேல் நடால் (ஸ்பெயின்), நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரும் நடப்பு டென்னிஸ் காலகட்டத்தின் ‘மும்மூர்த்திகள்’ ஆக கருதப்படுபவர்கள். டென்னிஸ் விளையாட்டில் மதிப்பு மிக்கதான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக எண்ணிக்கையில் கைப்பற்றுவதில் இந்த மூவரிடையே பரபரப்பான போட்டி இருந்து வந்தது.
தற்போதைய நிலையில் நடால் 22 பட்டங்களுடன் முதலிடத்தில் இருக்க, ஜோகோவிச் 21 பட்டங்களுடன் அடுத்த இடத்திலும் பெடரர் 20 பட்டங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆனால், ஆண்கள் டென்னிஸ் உலகில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனை பெடரருக்குரியது.
கடந்த 1998ஆம் ஆண்டு வாக்கில் டென்னிஸ் உலகில் அறிமுகமான பெடரர், முதன்முதலில் சர்வதேச அளவிலான தொடரில் விளையாடியது அவரது தாய்நாட்டில்தான். அங்கிருந்து தொடங்கிய அவரது ஆதிக்கத்தை யாராலும் அணை போட்டு தடுக்க முடியவில்லை.
2003ஆம் ஆண்டு விம்பிள்டனில் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார்.
அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ், 1 பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்;, 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் என மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ஏடிபி மதீப்பிட்டு தரவரிசையில் சுமார் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் பெடரர். அதில் தொடர்ச்சியாக 237 வாரங்கள் முதலிடத்தை தனக்கானதாக சீல் செய்தவர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டுமே 20 முறை சம்பியன் பட்டங்கள் வென்ற பெடரர், விம்பிள்டன் அரங்கில் மட்டும் 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
ஏடிபி டூர் நிலையில் பெடரர் 103 சம்பியன் பட்டங்கள், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 24 தொழில்முறை டென்னிஸில் களத்தில் ஆண்டுகள், டென்னிஸ் வாழ்க்கையில் மொத்த 1,251 வெற்றிகள் என மகத்தான சாதனைகள் அவருக்குரியது.
கடந்த 2018ஆம் ஆண்டு தனது 36 வயதில் உலகின் முதல் நிலையை எட்டி, ஏடிபி தரவரிசை வரலாற்றில் முதலிடத்துக்கு வந்த மிக வயதான வீரர் என்ற சாதனை படைத்தார்.
அதேபோல திறமையால் அவர் குவித்த சொத்துகளும் ஏராளம். ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தைச் சேர்த்து டென்னிஸ் விளையாட்டின் மூலம் பெடரர் சம்பாதித்த பரிசுத் தொகை 130.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்த தொகையானது, சம்பியன் பட்டங்கள் வென்றதன் மூலம் மட்டுமே. இதுதவிர, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் மூலம் பெடரர் பெற்ற கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை.
என்றாலும், ஜோகோவிச், நடாலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திலேயே ஃபெடரர் உள்ளார். முதல் இடத்தில் 158.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் 131.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் நடாலும் உள்ளனர்.
இப்படியாக டென்னிஸ் உலகில் அவர் எட்டாத உயரங்களே இல்லை. இருந்தபோதும் காயங்கள் அவரை ரொம்பவே வருந்தச் செய்தன. பெடரர் தனது வலது முழங்கால் காயத்துக்காக மேற்கொண்ட அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக அவரால் பெரிதாக டென்னிஸில் பங்கேற்க முடியாமல் போனது.
அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பிரதான டென்னிஸ் தொடர்களில் விளையாடாமல் இருந்து வந்தார். இறுதியாக, கடந்த 2021 விம்பிள்டன் காலிறுதியில் தோற்ற பிறகு அவர் களம் காணவில்லை. இந்நிலையில்தான் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.