இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, காயம் காரணமாக, எதிர்வரும் ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஓய்வு மற்றும் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி நிலையத்துக்கு சென்றுள்ளார்.
பும்ரா உலகக்கிண்ணத் தொடரில் விளையாடத பட்சத்தில், மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
இதனிடையே தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான தொடரில், பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஜ் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உபாதைக் காரணமாக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ள நிலையில், தற்போது ஜஸ்பிரீத் பும்ராவின் இழப்பும் அணியை கடும் நெருக்கடிக்குள் தள்ளும் என கூறப்படுகின்றது.
பணிச்சுமை அடிப்படையில் முக்கிய வீரர்களுக்கு அவ்வப்போது ஓய்வளிக்கப்பட்டு வருவதன் அடிப்படையிலும், காயம் காரணமாகவும் நடப்பாண்டில் இதுவரை பும்ரா அணியில் அதிகமாக களம் காணவில்லை.
மொத்தமாக இந்த ஆண்டு அவர் ஐபிஎல் போட்டிகள் தவிர்த்து, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 5 ரி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதுவரை 60 சர்வதேச ரி-20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.