இலங்கையின் உற்ற நண்பன் என்று கூறிக்கொண்டிருக்கும் சீனா, இலங்கைக்கான உரத் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதை நிறுத்தியிருக்கின்றது என்றே கூறவேண்டியுள்ளது.
அதேநேரம், சீன உர கப்பலுக்கு செலுத்திய 6.9 மில்லியன் டொலரை மீள பெறுவதற்கும் அல்லது அதற்கு பதிலாக இரசாயன உரத்தை பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர மஹிந்த அமரவீர பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
உர விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள சட்டமாதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் அதுபற்றி செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறிருக்கையில், 2021 ஏப்ரலில், ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரே இரவில் தடையை விதித்து அறிவிப்பை வெளியிட்டார்.
இரசாயன உரங்களின் பாவனை மற்றும் வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த முடிவினை எடுப்பதாக தன்னை நியாயப்படுத்தினார்.
ஆனால், அந்த முடிவினை ஒரே இரவில் அமுல்படுத்துவது சாத்தியமற்றது என்று பல்வேறு தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்ட போதிலும், ஜனாதிபதியாக இருந்த கோட்டா திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருந்தார்.
இதனால், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் காணப்பட்ட உரங்களை பதுக்கி வைத்தனர்.
அதனால், நாட்டில் பற்றாக்குறை உருவாக்கியது. உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்காலப்பகுதியில் தான், சீனாவின் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட் சீனாவின் கிண்டாவே சீவின் பயோடெக் நிறுவனத்தின் 20ஆயிரம் மெற்றிக் தொன் உரத்துடன் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தது.
இந்நிலையில், குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட உரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளுக்கு அமைவாக, அந்த உரத்தினை விவசாயச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என்பது இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் சீனாவின் அழுத்தங்களால் மூன்றாம் தரப்பின் ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. அதில், பயிர்ச்செய்கைக்கு பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.
எனினும், தனது உரத்தினை இலங்கையில் இறக்குமதி செய்ய முடியும் என்பதில் நம்பிக்கையாக இருந்த சீன நிறுவனம் அரசாங்கத்தின் இறுக்கமான முடிவினால் கோபமடைந்திருந்தது.
எவ்வாறாயினும், பாதிப்புக்கள் நிறைந்த உரம் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதிகள் அளிக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, குறித்த கப்பல் இலங்கையை விட்டுச் செல்வதற்கு தயாரானது.
ஆனால், கப்பல் தரித்து நின்றமை உள்ளிட்ட செலவீனங்களுக்கான சீன உர நிறுவனம் இலங்கையிடமிருந்து 6.9மில்லியன் டொலர்களை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டே சென்றது. இதற்கு இலங்கை வணிக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் வெளியான தீர்ப்பும் காரணமாகின்றது.
மறுபக்கத்தில், இலங்கையின் மக்கள் வங்கியை சீனா கறுப்புபட்டியலில் இணைத்துக்கொண்டது. இந்தச்செயற்பாடானது, இலங்கை, சீனா இடையே இராஜதந்திரீக உறவுகளையும் வெகுவாகப் பாதித்தது. அதேநேரம் சீனாவின் மறுமுகத்தினையும் இலங்கை புரிந்து கொண்டது.
இந்நிலையில், குறித்த சீன உரம் இறக்குமதி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த புதிய விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், விவசாயத்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யும் போது உரம் தொடர்பான விடயதானம் எனக்கு பொறுப்பாக்கப்படவில்லை. விவசாயத்துறை திணைக்களம், விவசாய காப்புறுதி திணைக்களம் மாத்திரமே என்னிடமிருந்து. உரம் தொடர்பில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இருந்தார்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன், சீன கப்பல் விவகாரத்திற்கு நான் பொறுப்பு கூற வேண்டியதில்லை, அது எனது பொறுப்பல்ல, இவ்வளவு காலம் நான் இதனை குறிப்பிடவில்லை. சீன உர மனுகோரல் பகிர்ந்தளிப்பு தொடர்பான நவடிக்கைகளில் நான் தலையிடவில்லை.
விவசாயத்துறை அமைச்சர் என்ற ரீதியில் சீன உரக் கப்பல் தொடர்பில் பரிசீலனை செய்தேன். சீன உரக் கப்பல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் இடம்பெறவில்லை. சட்டமாதிபரின் ஆலோசனைக்கமையவே அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கணக்காய்வாளர் நாயகம், குறித்த கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட இழப்பீட்டை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைளை பரிந்துரைத்திருந்ததோடு, சீன உர நிறுவனம் அதனை வழங்காது விட்டால் அக்கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்களிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார்.
இதற்கான முயற்சிகளை விவசாய அமைச்சு முன்னெடுத்தபோதும், தற்போது அச்செயற்பாடு இயலாது போயிருக்கின்றது. அதுமட்டுமன்றி, 2011 ஆம் ஆண்டு, ஒரு ஏக்கருக்கு 106 கிலோ யூரியாவும், 30 கிலோ எம்.ஏ.பியும், 35 கிலோ டி.எஸ்.பியும் மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்விதமான மனிய விலைகள் வழங்கப்பட்டாலும் அவற்றின் விலைகள் மூன்று நான்கு மடங்கால் அதிகரித்துள்ளது.
ஆகவே, தற்போது விவசாயத்துறை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைப் போக்குவதற்காகான உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏதுவாக 65 ஆயிரம் தொன் யூரியா உரம் வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா இலங்கைக்கு 44 ஆயிரம் தொன் யூரியா உரத்தை சமீபத்தில் வழங்கியிருந்தது. இந்த யூரியா பசளை அண்மையில் கொழும்பு வந்து சேர்ந்திருந்திருந்தது.
எஞ்சிய தொகுதியும் விரைவில் வரவுள்ளது. தற்போதைக்கு இலங்கையின் உணவுத்தேவையை இந்த யூரியாவே பூர்த்தி செய்யப்போகின்றது.