ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின், மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருபத்தி இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அபகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாலசிங்கம் ராஜ்சங்கருக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரின் மனைவி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
ஞானம் அறக்கட்டளையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மனிதாபிமான உதவியில் 22 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக சம்பந்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த இயக்குனர் பாலசிங்கம் ராஜ்சங்கர் மற்றும் அவரது மனைவி உமா ஞானசேகரம் ராஜ்சங்கர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை அபகரித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பாலசிங்கம் ராஜ்சங்கரும் அவரது மனைவியும் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபர் பாலசிங்கம் ராஜ்சங்கர் ஜூலை 25ஆம் திகதி இலங்கை திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், அவருக்கு வெளிநாடு செல்ல பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
அதன்பின்னர் குறித்த வெளிநாட்டு பயணத்தடை இன்று வரை தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், கொழும்பு இல.3 நீதவான் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் தொடர்பில் இதுவரையான விசாரணைகள் தொடர்பான மற்றுமொரு அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்தது.
ஜெகதீஷன் ரவிச்சந்திரன் என்ற ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடிப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரணை செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டது.
சந்தேக நபரான பாலசிங்கம் ராஜ்சங்கர் தனது மனைவியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி பிணை பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கும் உறுதியளித்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதற்கமைய சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ராஜ்சங்கரின் மனைவியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தை தவிர்க்காத காரணத்தினாலும், தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் சந்தேகநபரின் மனைவிக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாலும் சந்தேக நபரின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக மார்ச் 2 ஆம் திகதி வரை நீக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் பிரகாரம், குறித்த வழக்கை அன்றைய தினத்திற்கு முன்னர் பிரேரணை மூலம் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும், சந்தேகநபரை அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.