இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளார்.
மத்திய வங்கியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆரம்பத் தீர்மானத்தில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் தங்களுக்குத் தெரிந்தவரை சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.
நாட்டின் கடன் வழங்குநர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாத இறுதியில் பணவீக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.