ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக்கலந்துரையாடலுக்கு இதுவரை அமைச்சர் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அமைச்சர் பந்துல குணவர்தன இல்லாமலேயே உரிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் குழுவின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயாராக இருந்தமையினால் இந்த நியமனங்கள் தாமதமாகியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணையமாட்டார்கள் என இதன்போது உறுதியாக கூறமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அமைச்சரவையில் எஞ்சியுள்ள வெற்றிடங்களைபொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இனியும் தாமதிக்காமல் நிரப்புமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.