உலகளாவிய நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், டஜன் கணக்கான வளரும் நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் ‘செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவை’ என்றும் எச்சரித்துள்ளது.
ஏழை, கடனாளி நாடுகள் ஒன்றிணைந்து வரும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன என்றும் மேலும் பலர் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாதுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் பணச் சுருக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி ஆகியவை உலகெங்கிலும் ஏற்ற இறக்கத்தை தூண்டுவதால் சந்தை நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன என்றும் ஐ.நா. வின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயினால் நீண்ட காலத்திற்கு முன்பே பாதிக்கப்பட்ட பல நாடுகளில் கடன் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ நா. கூறியுள்ளது.