அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்-14 ஐ இந்தியாவில் தயாரிக்கத் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் சீனாவிலிருந்தான அதன் விநியோகச் சங்கிலியை மாற்றவுள்ளது.
அப்பிள் நிறுவனமானது, தனது பெரும்பாலான தொலைபேசிகளை சீனாவில் தயாரிக்கிறது.
ஆனால் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றுவதற்கு அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் பரவலான முடக்கத்தினை ஏற்படுத்திய பூச்சிய கொரோனா கொள்கைகள், அந்நாட்டின் வணிகங்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அப்பிள் நிறுவமானது, தனது புதிய ‘ஐபோன் 14’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
‘இந்த மேம்படுத்தப்பட்ட ஐபோன் 14 வகையை இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அப்பிளின் பெரும்பாலான ஐ-போன்களை உற்பத்தி செய்யும் தைவானைத் தளமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது,
இந்நிலையிலேயே தனது உற்பத்தியை இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நிலவரப்படி, அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 4சதவீதமாகும். எனினும், இந்திய நவீன தொலைபேசிச் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மிகவும் மலிவான தென் கொரிய மற்றும் சீன தொலைபேசிகளுடன் போட்டியிட முடியாது அப்பிள் நிறுவனமானது போராடி வருகிறது.
இதேவேளை, இந்தியாவில் அப்பிள் நிறுவனம் தமது உற்பத்திகளை ஆரம்பிபதால் அவற்றின் விலைகள் குறைவடையும் அல்லது மலிவான விலையில் கிடைக்கும் என அர்த்தமாகிவிடாது.
உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரிகள் அதிகமாக உள்ளமையால் விலைக்குறைவு சாத்தியமில்லை.
எனவே இந்தியர்கள் ஐபோனில் ‘மேட் இன் இந்தியா’ என்ற குறிச்சொல்லைப் பார்க்கும்போது, அதை சொந்தமாக்குவதற்காக அதிகளவான தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளது என்ற அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
அத்துடன், நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது அரசாங்கம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘மேக் இன் இந்தியா’ பிரசாரத்தைத் தொடங்கியது.
அதேநேரம், இந்த மாத தொடக்கத்தில், முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கனின் ஆய்வாளர்கள், அப்பிள் நிறுவனம் தனது இந்த ஆண்டு உற்பத்தியில் 5 சதவீதத்தினை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.
2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஐபோன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு தெற்காசிய நாட்டினை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த ஆண்டு, அப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான் வியட்நாமில் 1.5 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்தது.
இந்த உற்பத்தியை அதிகரிக்க அந்நாட்டின் வடக்கில் 300 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.