வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச்சுடன் கதைத்து விவசாயம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,பொருளாதார பாதிப்பால் எமது பகுதி மக்கள் பாதிப்படைந்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் விவசாய மக்களை ஊக்கப்படுத்தும் முகமாக 12 மாவட்ட மக்களுக்கும் உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு விதை தானியங்கள் வழங்கப்படுகின்றது.
அதில் வன்னி மாவட்ட அமைச்சர் என்ற வகையில் அதிகமாக 9 மில்லியன் என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் நிதி உதவிகளை கேட்டிருக்கின்றோம். கிடைக்கும் பட்சத்தில் அதனை வழங்குவதாக இருக்கின்றோம்.
சிறிய உதவியாக இருப்பினும் குறித்த உதவிகளை பெற்றவர்கள் அதனை உரிய முறையில் பயன்படுத்தி நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற உணவு பற்றாக்குறையின் தாக்கத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
எங்களது மாவட்டங்களில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது. குறிப்பாக அண்மையில் வன இலாகா அமைச்சருடன் கதைத்திருந்தோம். எமது பகுதிகளில் உள்ள விவசாய பயிர்ச்செய்கை, தோட்ட பயிர்ச்செய்கைகளில் வன இலாகாவின் பிரச்சினை பாரியளவில் இருக்கின்றது.
அதில் எடுக்கப்பட்ட தீர்மானம் காணிகளில் பிரச்சினை இருக்கலாம் ஆனால் விவசாய பயிர்ச்செய்கை, தோட்டம் செய்யக்கூடிய காணியாக இருந்தால் அதனை அவர்கள் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதில் வன இலாகாவினர் இடையூறு விளைவிக்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அத்தோடு அமைச்சில் இருந்து ஒரு குழு அனுப்புவதற்கு இருக்கின்றார்கள். எந்த காணியாக இருந்தாலும் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அதனை விவசாயம் செய்யக்கூடிய ஏற்பாடுகளை அமைச்சோடு கதைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இலங்கையை பொறுத்தவரை காடுகள் அதிகமாக இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரிவது வடமாகாணம் தான். அதிகாரிகளிடம் இருந்து விபரத்தை எடுக்காது சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது தான் பிரச்சினை .
2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் வழங்கப்பட்ட சுற்றுநிருபங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.