களுத்துறை மாவட்டத்தில் ஹொரண மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் ஹெகொடவில் 142.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் 122.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் மேல்கோபிவத்த பிரதேசத்தில் 121 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை, நாட்டில் உருவாகியுள்ள மழையுடனான காலநிலை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்தத் திணைக்களம் சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.