மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோ, நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட வருடாந்த அணு ஆயுதப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
வடமேற்கு ஐரோப்பாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப்பயிற்சிகள், எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உக்ரைனில் நடந்துவரும் போர் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பயிற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், ரஷ்ய படையெடுப்புக்கு முன்னதாகவே இந்த பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது.
30 நாடுகள் இணைந்துள்ள இந்த இராணுவ ஒத்திகை பயிற்சி, மேற்கு ஐரோப்பா, பெல்ஜியம், பிரித்தானிய உள்ளிட்ட வான்வெளி மீது நடைபெறுகின்றது. இப்பயிற்சியில் மொத்தம் 60 விமானங்கள் வரை பங்கேற்கும்.
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இந்த பயிற்சியை கைவிட வேண்டும் என்ற கருத்தை நிராகரித்தார்.
போர் வரும் முன்னர், முன்னெச்சரிக்கையாக தடுப்பதே நேட்டோ இராணுவத்தின் வலிமை என்பதால், நாங்கள் விழிப்புடன் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் 15,000 உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. மேலும், ஆயுதங்களுக்காக 500 மில்லியன் யூரோக்களை கூடுதலாக வழங்க உள்ளது.