நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
20வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைத்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.
எனினும் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அதனை நான்கரை வருடங்களாக அதிகரித்ததாகவும் அது குறித்து 22ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைப்பதாக இருந்தால், அதை தானே செய்ய வேண்டும் என்றும் அதற்கான எந்த ஆயத்தமும் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அவசியம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன வினவியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக மேலதிக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.