முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும்போதே, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மாகாண சபை மற்று உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள தரவுகளுக்கமைய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன.
அதற்கமைய, தற்போது முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்கள் சுமார் 3 இலட்சம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் வாடகை முச்சக்கரவண்டிகளை உரிய பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து ஒதுக்கீட்டை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள குறைந்தது இருவாரங்களாவது தேவைப்படும். தற்போது, வாடகை முச்சக்கரவண்டிகள் தொடர்பான தரவுகளை QR இல் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது நிறைவடைந்த பின்னர் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும்.
மூன்று கட்டங்களில் மொத்தமாக 100 ரூபாவினால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனை பொதுமக்களுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் வழங்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.