ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புடின் கூறுகையில், ‘4 பிராந்தியங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும் ரஷ்யாவின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில், புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து ‘ரஷ்ய’ பிராந்தியங்களின் ஆட்சித் தலைவர்களுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது’ என கூறினார்.
எனினும், இராணுவ சட்டத்தின் கீழ் பிராந்தியத் தலைவர்களுக்கு என்னென்ன கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது குறித்து புடின் விளக்கமாகக் கூறவில்லை.
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வருகிறது.