உக்ரைன் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவ நிபுணர்களை ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் நிறுத்தியுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பயிற்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்களே இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கிரிமியாவில்; ஈரானிய இராணுவ வீரர்கள் தரையிறங்கி இந்த நடவடிக்கைகளில் ரஷ்யாவுக்கு உதவியதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான ஈரானியர்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறார்கள் மற்றும் ரஷ்யர்கள் உக்ரைனில் ஆளில்லா விமானங்களை இயக்குகிறார்கள்.
உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பை பாதிக்கும் ஆயுதங்களை வழங்குவதன் மூலம், ஈரான்; இப்போது நேரடியாக தரையில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனிய மக்களுக்கு எதிராக ஈரான் இந்த ஆயுதங்களை வழங்குவதை அம்பலப்படுத்தவும், தடுக்கவும் மற்றும் எதிர்கொள்ளவும் அமெரிக்கா எல்லா வழிகளையும் தொடரும்’ என கூறினார்.
இதனிடையே, ‘காமிகேஸ்’ ஆளில்லா விமானங்களால் உக்ரைனிய தலைநகர் கிவ் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு பொறுப்பான ஈரானிய வணிகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பிரித்தானியா தடைகளை அறிவித்துள்ளது.