சாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தானாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாத பட்சத்தில், வேறு ஒரு அறியப்படாத நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மொரிஷியஸ் மற்றும் பிரித்தானியாவில் உரிமை கோரப்படும் சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் குறைந்தது 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இதுவரை 60 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சட்டவிரோதமான இலங்கைக் குடியேற்றவாசிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்ரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.