ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஹோபர்ட் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அபீப் ஹொசைன் 38 ஓட்டங்களையும் ஹொசைன் சந்தோ 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், போல் வான் மீகெரென் மற்றும் பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் விக்கெட்டுகளையும் க்ளாசென், பிரிங்ல், செரீஸ் அஹமட் மற்றும் வன் பீக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், பங்களாதேஷ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் அக்கர்மேன் 62 ஓட்டங்களையும் போல் வான் மீகெரென் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுகளையும் ஹசன் மொஹமத் 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் மற்றும் சௌமியா சர்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டஸ்கின் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.