இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இதுகால வரையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், அந்த பணயங்களின் பின்னணி மற்றும் ஏனைய அனுகூலங்களை இந்தியா தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.
பிரதமர் நரேந்திரமோடி, இந்த ஆண்டில் மே மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தார்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்த நிலையிலும், ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
முதலில் ஜேர்மனி சென்ற பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க்குக்கும் இறுதியாக பிரான்ஸுக்கும் செல்லவுள்ளார்.
மூன்று நாடுகளிலும் 65மணி நேரம் செலவிட்ட பிரதமர் மோடி, இந்தப் பயணத்தின்போது, 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
7 நாடுகளைச் சேர்ந்த 8 உலகத் தலைவர்களை அவர் சந்தித்ததுடன் 50 சர்வதேச தொழிலதிபர்கள் உடனும் கலந்துரையாடியுள்ளார்.
ஜேர்மனுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தவர், இந்தியா-ஜேர்மனி இடையேயான இருதரப்பு பேச்சுவரத்தையில் பங்கேற்றார்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள், இந்திய -ஜேர்மனி உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து டென்மார்க் சென்றிருந்தவர், அங்கு 2ஆவது இந்தியா – நோர்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதன் ஒருபகுதியாக, ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாட்டு பிரதமர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்து, இருதரப்பு உறவுகள் வலுவாக்கத்திற்கு வித்திட்டிருந்தார்
அடுத்து பிரான்ஸ் சென்றவர், இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மெக்ரோன், இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல், உக்ரைன் விவாகரம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
அடுத்து, புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா தினத்தன்று நோபளத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மோடி புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினியில் வழிபாடு நடத்தியதோடு, நோபாள பிரதமரையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலிலுப்படுத்தும் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தார்.
‘இந்தியா – நேபாளம் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக கலாசார ரீதியாக நட்புறவு இருந்து வருகிறது. இந்தியா – நேபாள நட்புறவுக்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட முடியாது’ என பிரதமர் மோடி பகிரங்கமாக அறிவித்தருந்தமை விசேட அம்சமாகும்.
அடுத்தகட்டமாக மேமாதம் 24ஆம் திகதி ஜப்பானுக்கான விஜயத்தினை மேற்கொண்டவர், குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்தார். அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டாக அமைந்துள்ள குவாட்டில் இம்முறை, இந்தியா இரண்டு வெற்றிகளையும் பெற்றிருந்தது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறது. எனினும் இந்த மாநாட்டில் அதற்கு இந்தியா இடமளிக்கவில்லை. குறிப்பாக, கூட்டறிக்கையில் உக்ரைனை குறிப்பிட்டு இந்தியா பேசவில்லை.
கூட்டறிக்கையில் ‘உக்ரைனில் நிலவும் துயரமான மோதல்’, ‘உக்ரைனில் உள்ள மோதல்கள் மற்றும் நடந்து கொண்டிருக்கும் துயரமான மனிதாபிமானநெருக்கடிக்கு நமது பதில்கள்’ , ‘இந்தோ-பசிபிக் பிராந்தியம் விளைவுகள்’ என்றே இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இது இந்தியாவின் நடுநிலைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும், தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
அதனையடுத்து ஜுனில் ஜி7 அமைப்புக்கு தலைமைதாங்கும் நாடு என்ற அடிப்படையில், ஜேர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஷ் விசேட அழைப்பாளராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டிருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று குறித்த மாநாட்டில் பங்கேற்ற அவர், ஜேர்மன் பிரதமர் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறுவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சுக்களை நடத்தினார்.
தொடர்ந்து ஜி7 நாடுகள் மற்றும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் சர்வதேச அமைப்புகளுடன், சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப்பாதுகாப்பு, சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற முக்கியமான அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதனையடுத்து, அபுதாபி சென்ற பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்சின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து நேரில் இரங்கல் தெரிவித்தும் இருந்தார்.
அதனையடுத்து, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 22ஆவது ஷங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின், சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகியோரையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இறுதியாக, ஜப்பானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டின் மறைந்த பிரதமர் ஷின் ஷோவின் இறுதி நிகழ்வில் பங்கேற்றதோடு உலகத்தலைவர்களையும் சந்தித்திருந்தார்.
பிரதமர் மோடி, தனது முதலாவது பதவிக்காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாவது பயணக்காலத்தின் முதற்பாதியில் இதுவரையில் எழுபதுக்கு உட்பட்ட வெளிநாட்டு பயணங்களையே மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப்பயணங்கள் திடீரெனக் குறைவடைவதற்கு, காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்கையில், முதற்கட்டத்தில் அவருக்கு சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அதனால் அவர் நேரடியாகச் செல்ல வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
ஆனால், இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் கட்டியெழுப்பிய இருதரப்பு உறவுகளை பிசகாமல் முன்னெடுத்துச் செல்வதே மிகவும் முக்கியமான பணியாக இருக்கின்றது. அந்த வகையில் தான் பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களை குறைத்திருக்கின்றார்.
எவ்வாறாயினும், அயலுறவுக்கு முன்னுரிமை, உலகளாவிய நடுநிலை உறவு ஆகிய வெளியுறவுக் கொள்கையில் பின்பற்றப்படும் முக்கிய விடயங்களால் இந்தியா அனைத்து நாடுகளுடனான சுமூக உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.
இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வல்லரசுக்கான இலக்கை அடைவதற்கான படிநிலைகளில் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றமை விசேட அம்சமாகும்.