பிரேஸில் ஜனாதிபதி தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்று ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.
முன்னதாக 2003ஆம் மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஜனாதிபதியாக இருந்த முன்னாள் தொழிற்சங்கத் தலைவரான லூலா, 50.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக பிரேசிலின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, 49.2 சதவீத வாக்குகளுடன் தோல்வியடைந்தார்.
77 வயதான லூலா, தனது வெற்றியைக் கொண்டாடும் வகையில் மேலே எழுதப்பட்ட ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தையுடன் பிரேஸிலியக் கொடியைத் தொடும் புகைப்படத்தை ட்வீட் செய்தார்.
இது கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தைக் குறிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், லூலாவுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனாதிபதியாகியுள்ள இடதுசாரி லூலா, எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத லூலாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தை அளிக்கிறது.