சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் ஏதேனும் உதவிகள் கிடைத்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையானது பத்து மாதங்கள் மிகவும் நெருக்கடியான காலத்தை கழித்ததாகவும் அதன் காரணமாகவே எரிசக்தி துறையில் நெருக்கடி ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதனூடாக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தனியார் விநியோகஸ்தர்களுக்கு இத்துறையில் பிரவேசிப்பதற்கான சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்புகள் திருத்தியமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 70 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.