இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் உள்நாட்டில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணி விபரங்களை கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
மிட்செல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூன்று வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதை கிரிக்கெட் அவுஸ்ரேலியா விரும்பினாலும், ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதைத் தொடர்ந்து இரு தொடர்களிலும் விளையாட மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த தொடரில், கடந்த சிம்பாப்வே மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட ட்ராவிஸ் ஹெட் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆரோன் பின்ஞ்சின் ஓய்வைத் தொடர்ந்து இவரது வருகை அமைந்துள்ளது.
மார்கஸ் ஹரிஸ், கவுண்டி துடுப்பாட்டத்திலும் ஷெஃபீல்ட் ஷீல்டிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதேவேளை ஸ்கொட் போலண்ட் முதல் தேர்வு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பேக்அப் வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் அணி விபரம்: பெட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வோர்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணி விபரம்: பெட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரி-20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 17ஆம் திகதி தொடங்க உள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், கம்மின்ஸின் முதல் அணித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் தொடராகும்.
நவம்பர் 22ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 30ஆம் திகதி முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா விளையாடுகின்றது.