லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார்.
நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பிலும், 4பேர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களின் விடுதலை குறித்து இந்த சந்திப்பில் நன்றி தெரிவித்த லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன், எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் வலியுறுத்தி உள்ளார்.
அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் தைப்பொங்கலுக்கு மற்றும் ஒரு தொகுதி அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கின் சமகால அரசியல் நிலை, பொருளாதார அபிவிருத்தி, முதலீடு குறித்த விடயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை அல்லிராஜா சுபாஸ்கரனின் வேண்டுதலுக்கு அமைய விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பது உணரப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, விடுதலை பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய்களை கடந்த வாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















