யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, மூத்த சட்டத்தரணிகள் உள்பட 20இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகி முன்வைத்த பிணை விண்ணப்பம் மீது எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மன்று தவணையிட்டது.
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர்.
பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.