பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளதோடு நடுத்தர மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அரச செலவினம் 7,885 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள அதேநேரம் அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.