திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் வாக்குமூலம பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி சந்தேகநபர் 2,510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
திலினி பிரியமாலி, இசுரு பண்டார, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிரிசுமண தேரர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.