விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இம்மாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.
டிசம்பர் 08 ஆம் திகதி பிற்பகல், வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை இழந்தால், அரசியலமைப்பின் 7 (2) வது பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,885 பில்லியன் ரூபாயாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது 29.2வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகள் எட்டப்படவுள்ளன.
புதிய உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்து, இளைஞர்களுக்கு நல்ல நாட்டிற்கு தேவையான புதிய வேலைத்திட்டம் வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தவிர இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.