ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன் படி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 1100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். சென்னையில் 66 இடங்களில் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.