மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அத்துடன், துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்திற்கான காசோலை அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதான சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி மற்றும் கால்பந்து வீராங்கனையான பிரியா, மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரச மருத்துவமனையில் சிகிச்சை செய்துக் கொண்டார்.
அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.
அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று முன் தினம் பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
இது மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நேர்ந்த உயிரிழப்பு என கூறி பிரியாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் போராட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து 2 மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.