யாழ். மத்திய கல்லூரியில் தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வு யாழ். மத்திய கல்லூரி ரொமைன் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
வடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் தேசிய கல்வி நிறுவனத்தின் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையால் கண்காட்சி ஒழுங்குகள் செய்யப்பட்டது.
இந்த கண்காட்சியானது எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விற்பனைக்குள்ள புத்தகங்கள் 20 சதவீத விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந் நிகழ்விற்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் ஜே.பிறட்லி தலைமை தாங்கியதுடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இக் கண்காட்சியில் தேசிய கல்வி நிறுவகத்தின் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையின் பணிப்பாளர் கே.பிரபாகரன், மாகாண கல்வி உதவிப் பணிப்பாளர் ஆ. உதயகுமார், தேசிய கல்வி நிறுவகத்தின் பதவி நிலை அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.