இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களின் ஏழ்மையான வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை என கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய ஒன்று கூட்டுனர் ஹர்மன் குமார அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
திருகோணமலையில் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மீன்பிடி கலாச்சார விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹர்மன் குமார இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், ‘2022ஆம் ஆண்டை சிறுபான்மை மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை நியமித்துள்ள போதிலும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் மீனவர்களுக்கு பயன் தரும் வகையிலான எந்தவித திட்ட முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை.
கடல், ஏரி மற்றும் குளங்களை வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக திருகோணமலை மாவட்டமானது அபிவிருத்தி என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்படுகிறது. கடல் வளங்களை பிற நாட்டவருக்கு வழங்குவதன் ஊடாக குறித்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவது தடைப்படுவதால் பல மீனவர்கள் தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என கூறினார்.