வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சிரமதானப்பணி இடம்பெற்றது.
இதன்போது இதனருகில் சிதைவடைந்திருந்த நினைவிடத்தின் அருகே இருந்த பற்றைகளை வெட்ட முற்பட்டபோது இராணுவத்தினர் அதற்கு அருகில் எதுவும் செய்யமுடியாது என அறிவுறுத்தினர்.
இதனையும் மீறி பற்றை துப்பரவு செய்யப்பட்டது. இதன்போது இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது இராணுவத்தினரும், பொலிசாரும் சிரமதானத்தை தடுக்க முற்பட்டனர்.
தீருவில் மைதானத்தில் மட்டுமே உங்களுக்கு நகரசபை அனுமதி உள்ளது. ஆனால் புலிச்சின்னங்கள் மீது எதையும் செய்யவேண்டாம் என அச்சுறுத்தியதுடன் ஒளிப்படங்கள் மூலம் அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது நான்கு இராணுவத்தினர் தொடர்ச்சியாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.